மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாக்., யாத்ரீகர்கள் 68 பேர்!

1


லக்னோ: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹிந்து யாத்ரீகர்கள் 68 பேர் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நிகழ்வு, ஜன., 13ல் துவங்கியது. பிப்., 26ம் தேதி வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இதுவரை 34 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.



இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹிந்து யாத்ரீகர்கள் 68 பேர் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அவர்கள் புனித சடங்குகளுக்காக பிரயாக்ராஜுக்கு வருகை தந்து, மூதாதையர் சாம்பலைக் கரைத்து வழிபட்டனர்.


சிறப்பு விசாக்களில் வந்துள்ள யாத்ரீகர்கள், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் புனித சங்கமத்தில் நீராடி, தங்கள் முன்னோர்களை வழிபட்டனர். பாகிஸ்தானில் இருந்து வந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி சுரபி, முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்து, கும்பமேளாவில் பங்கேற்பது குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

அவர் கூறியதாவது: நான் இங்கு வந்து இருப்பது ஒரு பாக்கியம் என்று உணர்கிறேன். எங்கள் குழுவிற்கு எளிதான விசா ஒப்புதல் அளித்த இந்திய அரசுக்கு நன்றி. எங்கள் பயணத்தை எளிதாக்கியதற்காக இந்திய அரசுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement