ஏற்றுமதியாளர் பிரச்னைக்கு தீர்வு; சுங்கத்துறை அதிகாரி உறுதி

திருப்பூர்; சுங்கத்துறை தலைமை கமிஷனர் விமலநாதன், கூடுதல் கமிஷனர் விஜயவேல் கிருஷ்ணா ஆகியோர் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுடன் நேற்று ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் கலந்துரையாடினர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருகுமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் குமார் துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''திருப்பூரின் ஏற்றுமதி சென்ற ஆண்டடை விட, இந்தாண்டு, 15 சதவீதம் வளர்ச்சியை எட்டும் என்று நம்பிக்கை உள்ளது. 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி, 30 கோடி ரூபாய்க்கு உள்நாட்டு வியாபாரம் இருக்கும். வளம் குன்றா வளர்ச்சி மற்றும் பசுமை ஆடைகள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.

பல்வேறு பிரிவுகளில், ஏற்றுமதியாளர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு சுங்கத்துறை தலைமை கமிஷனர் விமலநாதன் விளக்கம் அளித்தார். ஏற்றுமதியாளர்கள் தங்கள் எதிர்கொள்ளும் சுங்கத்துறை சார்ந்த எந்த ஒரு பிரச்னையும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் ஏ.இ.பி.சி.,யின் கவனத்துக்கு கொண்டு வருமாறும், அதன் வாயிலாக அவை ஆவணப்படுத்தப்படும் என கமிஷனர் உறுதியளித்தார்.

Advertisement