5 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்: கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ்

6


புதுடில்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ., முயற்சி செய்வதாக கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த டில்லி கவர்னர் உத்தரவிட்டு உள்ளார். இதனையடுத்து கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


டில்லி சட்டசபைக்கு நேற்று முன்தினம்( பிப்.,05) தேர்தல் நடந்தது. ஓட்டுகள் நாளை (பிப்.8) எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பா.ஜ.,விற்கு சாதகமாக உள்ளது. ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்ட ஆம் ஆத்மி கட்சி, கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் ஆவார் எனக்கூறி வருகிறது.


தொடர்ந்து நேற்று அக்கட்சி நிர்வாகியான சஞ்சய் சிங், '' ஆம் ஆத்மி சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்களை விலைக்கு வாங்க பா.ஜ., முயற்சி செய்வதாகவும், இதற்காக ரூ.15 கோடி தர அக்கட்சி தயாராக உள்ளதாகவும் '' குற்றம்சாட்டினார். இதனை கெஜ்ரிவால் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் வழிமொழிந்து வருகின்றனர்.



இதனிடையே, 70 தொகுதிகளிலும் போட்டியிட்டவர்களுடன் இன்று கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். அப்போது, நாளை நடைபெறும் ஓட்டு எண்ணிக்கை குறித்தும், அதற்கு எப்படி தயார் ஆவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.


இது தொடர்பாக ஆம் ஆத்மியைச் சேர்ந்த மூத்த தலைவர் முகேஷ் கூறியதாவது: கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பா.ஜ.,விற்கு சாதகமாக உள்ள போது, நமது கட்சியை சேர்ந்தவர்களை பா.ஜ., அழைப்பது ஏன் என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

தொலைபேசி அழைப்புகளை புறக்கணிக்க வேண்டும் எனக்கூறிய அவர், அனைத்து தகவல்களையும் அவரிடம் கூறுவதால், எங்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீட்சித் கூறியதாவது: கெஜ்ரிவால் 55-60 தொகுதிகளில் வெற்றி பெற்றால், தொலைபேசி அழைப்புகளால் எந்த பலனும் இருக்காது. அதேபோல், பா.ஜ.,வும் 45-50 தொகுதிகளில் வெற்றி பெற்றால், மற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்களை வாங்க வேண்டி இருக்காது. இதனால், தொலைபேசியில் அழைத்தனர் எனக்கூறுவது எதற்காக?கருத்துக் கணிப்புகளில் நம்பிக்கை இல்லை என்றால், அதை பற்றி கருத்துக் கூறுங்கள். உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பாக வைத்து இருக்கிறேன் எனக் கூறலாம். 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தவருக்கு இது தெரியாதா? உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் யார் வெற்றி பெறுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி தொலைபேசி அழைப்பு வந்தது என கூறுகிறவர்கள், யாருக்கு வந்தது என்பதையும் கூற வேண்டும்.

பேசுவதை சரியாக பேச வேண்டும். கெஜ்ரிவால் பதற்றப்பட வேண்டிய அவசியம் என்ன?


இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., புகார்



இதனிடையே, டில்லி கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு டில்லி பா.ஜ., பொதுச் செயலர் விஷ்ணு மிட்டல் எழுதிய கடிதத்தில், கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.


இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கவர்னர் சக்சேனா உத்தரவிட்டு உள்ளார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், கெஜ்ரிவால் வீட்டிற்கு விரைந்துள்ளனர். ஆனால், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். விசாரணை நடத்துவதற்கான எந்த ஆவணமும், நோட்டீசும் இல்லை என ஆம் ஆத்மி கட்சியினர் கூறியுள்ளனர்.

நோட்டீஸ்



இதனையடுத்து பா.ஜ., மீதான குற்றச்சாட்டு தொடர்பாக 5 கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அதில், தொலைபேசி மூலம் அழைப்பு வந்த 16 வேட்பாளர்களின் விவரம், எந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதற்கான ஆதாரங்களை அளிக்கும்படி கூறியுள்ளனர். மேலும், பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் தகவலை பரப்பியதற்காக ஏன் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement