ஸ்மித், கேரி சதம் விளாசல்: ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849222.jpg?width=1000&height=625)
காலே: இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம் விளாசினர்.
இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் காலேயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 229/9 ரன் எடுத்திருந்தது. குசல் மெண்டிஸ் (59) அவுட்டாகாமல் இருந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் குனேமன் பந்தில் லகிரு குமாரா (2) அவுட்டானார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. குசல் மெண்டிஸ் (85) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், குனேமன், லியான் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் (21), உஸ்மான் கவாஜா (36) சுமாரான துவக்கம் கொடுத்தனர். மார்னஸ் லபுசேன் (4) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஜோடி, அணியை சரிவிலிருந்து அணியை மீட்டது. கமிந்து மெண்டிஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்மித், டெஸ்ட் அரங்கில் தனது 36வது சதத்தை பதிவு செய்தார். பிரபாத் ஜெயசூர்யா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கேரி, தனது 2வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இவர்களை பிரிக்க முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறினர்.
ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு, 330 ரன் எடுத்து, 73 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஸ்மித் (120), கேரி (139) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் நிஷான் பீரிஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (116 போட்டி), டெஸ்ட் அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் 5வது இடத்தை இந்தியாவின் ராகுல் டிராவிட் (164 டெஸ்ட்), இங்கிலாந்தின் ஜோ ரூட் (152) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். மூவரும் தலா 36 சதம் அடித்துள்ளனர். முதல் நான்கு இடங்களில் இந்தியாவின் சச்சின் (200 டெஸ்டில் 50 சதம்), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (166ல் 45), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (168ல் 41), இலங்கையின் சங்ககரா (134ல் 38) உள்ளனர்.
நான்காவது இடம்
டெஸ்ட் அரங்கில் அதிக சதம் விளாசிய கேப்டன் வரிசையில் 4வது இடத்தில் உள்ளார் ஸ்மித். இவர், 41 போட்டியில், 17 சதம் அடித்துள்ளார். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் கிரீம் ஸ்மித் (109 டெஸ்டில் 25 சதம்), இந்தியாவின் கோலி (68ல் 20), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (77ல் 19) உள்ளனர்.
பாண்டிங்கை முந்தினார்
அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித், ஆசிய மண்ணில் அதிக ரன் குவித்த ஆஸ்திரேலிய வீரர்கள் வரிசையில் பாண்டிங்கை (1889 ரன், 28 டெஸ்ட்) முந்தி முதலிடம் பிடித்தார். ஸ்மித் 24 டெஸ்டில், 7 சதம் உட்பட 1983 ரன் எடுத்துள்ளார்.
இரண்டாவது கீப்பர்
ஆசிய மண்ணில் சதம் விளாசிய 2வது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் அலெக்ஸ் கேரி (139*). இதற்கு முன் ஆடம் கில்கிறிஸ்ட், மும்பை (2001, எதிர்: இந்தியா, 122 ரன்), பெங்களூரு (2004, எதிர்: இந்தியா, 104 ரன்), கண்டி (2004, எதிர்: இலங்கை, 2004)), பதுல்லாவில் (2006, எதிர்: வங்கம், 144 ரன்) சதம் அடித்திருந்தார்.