பங்கு சந்தை நிலவரம்
ஆர்.பி.ஐ., அறிவிப்பால் ஊசலாட்டம்
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன. ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைக்க முடிவு செய்த நிலையில், வங்கி சார்ந்த குறியீடு சரிவை கண்டது.
மேலும், தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் திடமான முடிவு எடுக்க திணறுவதால், சந்தையில் அதிகளவில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டது. தொடர்ச்சி யாக, மூன்றாவது நாளாக, சந்தை குறியீடுகள்
சரிவுடன் நிறைவு செய்தன.
எல்.ஐ.சி., நிகர லாபம் 17% உயர்வு
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., மூன்றாம் காலாண்டில், நிகர லாபமாக 11,056 கோடி ரூபாயை ஈட்டி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 9,444 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டிய நிலையில், தற்போது அது 17 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஊழியர்கள் நலனுக்கான செலவுகள் மற்றும் இதர செலவுகள், 30 சதவீதம் குறைந்தது இதற்கு காரணமாகும்.
மஹிந்திரா லாபம் 19% அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் 19 சதவீதம் அதிகரித்து உள்ளது. எஸ்.யூ.வி.,ரக கார்களுக்கு தேவை அதிகரிப்பால், அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலத்தில், 2,964 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. மேலும், இதே காலத்தில், இந்நிறுவனத்தின் வருவாய் 30,538 கோடி ரூபாயாக உயர்ந்து, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 20 சதவீதம் அதிகரித்தது.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள், 470 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.73 சதவீதம் அதிகரித்து, 74.83 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா அதிகரித்து, 87.50 ரூபாயாக இருந்தது.