முதல்வரை சந்திக்க முடியாமல் தோட்ட தொழிலாளர்கள் மறியல்

திருநெல்வேலி,:முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நெல்லையில் முதல்வர் தங்கியிருந்த சுற்றுலா மாளிகை முன் மறியலில் ஈடுபட்டனர்.

இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி வந்த முதல்வர் ஸ்டாலின், வண்ணாரபேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். அவரை பல்வேறு அமைப்பினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களையும் அவர் நேற்று சந்திப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ஆனால், காலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வந்தபோது, முதல்வரை சந்திக்க அதிகாரிகள் அவர்களை அழைத்துச் செல்லவில்லை. இதனால் தொழிலாளர்கள் சுற்றுலா மாளிகை முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தொழிலாளர் பிரதிநிதிகள் நான்கு பேரை மட்டும் முதல்வரை சந்திக்க அழைத்துச் சென்றனர். அவர்கள் கோரிக்கை மனுவை முதல்வர் பெற்றுக்கொண்டார்.

Advertisement