வரலாறு காணாத விலை உயர்வு; தங்கம் விற்பனை 20 சதவீதம் குறைவு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849550.jpg?width=1000&height=625)
சென்னை: தமிழகத்தில் தங்கம் சவரன் விலை, வரலாறு காணாத அளவுக்கு, 63,000 ரூபாயை தாண்டியதால், விற்பனை, 20 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியாவில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு, தங்கத்தை மட்டுமே பணமாக மாற்ற முடியும். எனவே, தங்கம் விலை உயர்ந்தாலும், பலர் வாங்கும் அளவை குறைத்து வாங்குகின்றனர்.
தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில், பழையது, புதியது என, தினமும் சராசரியாக, 15,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 10 - 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
அதற்கு பதிலடியாக அந்நாடுகளும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளன. இதனால், உலக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே, முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். சீனாவும் அன்னிய செலாவணி கையிருப்பை தங்கமாக மாற்றி வருகிறது. இதனால், உலக சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, நம் நாட்டிலும் தங்கம் விலை உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, எப்போதும் இல்லாத வகையில், 63,440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜன., 1ல் சவரன், 57,200 ரூபாய்க்கு விற்பனையானது. ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில், சவரனுக்கு, 6,240 ரூபாய் அதிகரித்துள்ளது. குறுகிய நாட்களில் தங்கம் விலை மிகவும் அதிகம் அதிகரித்து வருவது, இதுவே முதல் முறை. இதனால், தங்கம் விற்பனை சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ''பாதுகாப்பான முதலீடு என்பதால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வு காரணமாக, தங்கம் விற்பனை, 20 சதவீதம் வரை குறைந்துள்ளது'' என்றார்.
மேலும்
-
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை 41,250 பக்க இறுதி அறிக்கை கோர்ட்டில் தாக்கல்
-
கூலித் தொழிலாளியை தாக்கி கொல்ல முயன்ற வாலிபர் கைது
-
மருத்துவ மாணவியரிடம் சீண்டல் விசாரணை அறிக்கை அனுப்பிவைப்பு
-
மணிவிழுந்தானில் இணைப்பு சாலை அமைக்கக்கோரி சாலை மறியல் மக்களை குண்டுக்கட்டாக துாக்கிய போலீசாரால் தள்ளுமுள்ளு
-
மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
-
கிருஷ்ணகிரி நகராட்சியில் ரகசிய கேமரா தனிப்படை போலீசார் விசாரணை