பராமரிப்பில்லை: ஊராட்சிகளில் கால்நடை குடிநீர் தொட்டிகள்: கோடை காலத்தில் பாதிப்பை தடுப்பது அவசியம்

ராஜபாளையம்: மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு பராமரிப்பின்றி கிடக்கும் கால்நடை தொட்டிகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிராமங்களில் பெரும்பாலும் விவசாய பணிகளோடு சேர்த்து கால்நடை வளர்க்கும் தொழிலிலும் மக்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளதால் வேகமாக நீர் ஆவியாகி நீர் நிலைகள் வறண்ட நிலைக்கு மாறிவிடும். விவசாய தேவைகளுக்கும் நீர் நிலைகளை உபயோகப்படுத்துவதால் ஏரி, குளங்களும் ஆங்காங்கே உள்ள குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வற்றுவதால் கால்நடைகள் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்படும்.

கிராம மக்களின் தேவை கருதி கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கிராமப்புறங்களில் 2018--19 ல் ஒவ்வொரு ஊராட்சியிலும் தலா ரூ. 20,000 மதிப்பீட்டில் 100 நாள் வேலை உறுதி திட்ட பயனாளிகள் மூலம் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

தண்ணீர் தொட்டிகளுக்கு அருகே ஆழ்துளை குழாய் அமைத்து தொட்டிகளில் தண்ணீரை சேகரிக்கும் பணியை ஊராட்சி நிர்வாகத்தினர் செய்து வந்தனர். விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போர்க்கும் உதவி புரிந்து பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டம் நாளடைவில் முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை.

தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படாமலும் மண்மேவி செடி கொடிகள் வளர்ந்தும், ஆழ்துளை குழாய்களில் தண்ணீர் இல்லை, மோட்டார் பிரச்சனை என பல்வேறு காரணங்களை கூறி காட்சி பொருளாக வைத்துள்ளனர்.

அதிக வெயிலின் காரணமாக நீரிழப்பை கால்நடைகள் சந்திக்கும் நிலையை தவிர்க்க கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரை நிரப்புவதுடன் தேவையான புதிய இடங்களிலும் இவற்றை அமைக்க மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும்.

Advertisement