ஸ்ரீவி., மலை அடிவாரப் பகுதியில் மீண்டும் மண் திருட்டு அதிகரிப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மீண்டும் இரவு நேரங்களில் மண் திருட்டு நடப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால், வருவாய்த்துறையினர் இதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பந்த பாறை, திருவண்ணாமலை கோயில் பின்புறம் உள்ள பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களும், தனியார் விவசாய நிலங்களும், பனை மரங்களும் உள்ளன.
கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மண், மணல் திருட்டுகள் அதிகளவில் நடக்கிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் யானைகள் வழித்தடமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனை தடுக்க வேண்டிய வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
எனவே, கலெக்டர் நேரடி கள ஆய்வு செய்து இயற்கை வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.