அரசு மதுக்கடையை மூடக்கோரி  கலெக்டர்  அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் உள்ள அரசு மதுக்கடையை மூட வலியுறுத்தி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம் அருகே அழகன்குளம் நாடார் வலசையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை மூடக்கோரி ஜன.,30ல் எஸ்.டி.பி.ஐ.,கட்சியின் விமன் இந்தியா மூவ்மென்ட் அமைப்புடன் இணைந்து ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மதுக்கடை மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கடையை திறந்து மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக புகார் தெரிவித்து அழகன்குளம் மக்கள், எஸ்.டி.பி.ஐ.,கட்சி விமன் இந்தியா மூவ்மென்ட் அமைப்பினர் பிப்.,5 ல் ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் அழகன்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ.,கட்சியின் விமன் இந்தியா மூவ்மென்ட் அமைப்பினர், ஊர்மக்கள் முற்றுகையிட்டு அரசு மதுபான கடையை மூட வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றனர்.

இது தொடர்பாக கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து மனு அளித்தனர். அதில் வேறு இடம் பார்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் கடை மூடப்படும் அதுவரை கடையால் மக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement