சாலையோரம் சோலை: ராமநாதபுரத்தில் குறுங்காடு வளர்ப்புத் திட்டத்தில்: மரங்கள் வளர்க்க நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை ரோட்டோரங்களில் சோலை குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் ஏராளமான நிழல்தரும் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
மாவட்டத்தில் மதுரை ரோடு, கீழக்கரை, ராமேஸ்வரம் ரோடு நகர், கிராமப்புறங்களில் ரோடு விரிவாக்கப் பணியின் போது மரங்கள் அகற்றப்படுகின்றன. அவற்றிற்கு பதில் பல மரக்கன்றுகளை நடுகின்றனர். இந்நிலையில் சாலையோரத்தை சோலையாக மாற்றும் திட்டத்தில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் போதிய இடவசதியுடன், தண்ணீர் வசதி உள்ள இடங்களை தேர்வு செய்து குறுங்காடு வளர்க்க மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
இதில் முதற்கட்டமாக ராமநாதபுரம் அருகே கூரியூர் பஸ் ஸ்டாப் அருகே நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோரம் சோலை குறுங்காடு துவக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன் மேற்பார்வையில் புங்கன், அரசமரம், ஆலமரம், அத்திமரம், வேம்பு, புளி, நாவல், உள்ளிட்ட நிழல் தரும் மரங்கள் நடப்பட்டது.
இவற்றை கண்காணித்து தண்ணீர் ஊற்றி தொடர்ந்து பராமரிக்க உள்ளனர். இது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதால் மாவட்டம் முழுவதும் சாலையோரம் சோலை அமைக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.
கீழக்கரை ரோடு, திருப்புல்லாணி ரோடு, உத்தரகோச மங்கை ரோடு உள்ளிட்ட தண்ணீர் வசதி உள்ள இடங்களில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட உள்ளன என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.