முத்துப்பட்டி தபால் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாததால் அவதி
சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி தபால் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாததால் பஞ்சாயத்து அலுவலக கட்டடத்தில் போதிய வசதி இல்லாமல் இயங்குகிறது.
சிவகங்கை அருகே உள்ளது முத்துப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் 50 ஆண்டுகளாக தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
தபால் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாததால் கடந்த காலங்களில் வாடகை கட்டடங்களில் செயல்பட்டது. தற்போது சில ஆண்டாக பஞ்சாயத்து கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் இந்த தபால் அலுவலகம் செயல்படுகிறது.
இந்த தபால் அலுவலகத்தின் மூலம் 10க்கும் மேற்பட்ட கிராமத்தினரும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைகின்றனர்.
தற்போது பஞ்சாயத்து நிர்வாகம் இந்த தபால் அலுவலகத்தை காலி செய்து அவர்களது அறையை ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். கிராமத்தில் வேறு எங்கும் இடம் இல்லாததால் அருகில் உள்ள வேறு ஒரு கிராமத்திற்கு தபால் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
எனவே கிராம மக்கள் தபால் அலுவலகத்திற்கு சொந்தமாக முத்துப்பட்டியில் கட்டடம் கட்ட அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
முன்னாள் ஊராட்சி தலைவர் மாசானம் கூறுகையில், இந்த தபால் அலுவலகத்தால் இங்குள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைகின்றனர்.
சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கு முத்துப்பட்டி மைய பகுதி என்பதாலும் போக்குவரத்து வசதி எளிமையாக இருப்பதாலும் சுற்றுப்புற கிராம மக்கள் முத்துபட்டி தபால் அலுவலகம் வந்து செல்வது எளிது.
எனவே இவற்றை கருத்தில் கொண்டு தபால் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.