அரசு ஊழியருக்கு லீவு மறுப்பு; சக ஊழியர்களுக்கு கத்திக்குத்து


கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், தனக்கு விடுமுறை தர மறுத்ததால், சக ஊழியர்கள் நான்கு பேரை அரசு ஊழியர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.


மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோதேபூரை சேர்ந்தவர் அமித் குமார் சர்க்கார். கோல்கட்டா நியூட்டன் பகுதியில் உள்ள தொழில்நுட்ப கல்வித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார்.


இவர் நேற்று முன்தினம் அலுவலகத்தில் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். சக ஊழியர்கள் நான்கு பேர், அவருக்கு விடுமுறை தர எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.


இதில் ஆத்திரமடைந்த சர்க்கார், தான் வைத்திருந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து, நான்கு பேரையும் சரமாரியாக குத்தியுள்ளார்.


இதில் ஜெய்தேவ் சக்கரவர்த்தி, சாந்தனு சஹா, சர்தா லேட், ஷேக் சதாபுல் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நான்கு பேரும் மீட்கப்பட்டு, அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இதையடுத்து, ரத்தக்கறை படிந்த கத்தியை பிடித்தபடி, சர்க்கார் சாவகாசமாக நடந்து சென்றார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், சர்க்காரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:



விடுமுறை மறுக்கப்பட்டதால் கோபமடைந்த சர்க்கார், சக ஊழியர்களை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எதற்கு விடுமுறை மறுக்கப்பட்டது என தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement