மயான இடத்தை கைப்பற்ற முயற்சி லோக் ஆயுக்தாவில் பா.ஜ., புகார்

பெங்களூரு: ''மயானத்துக்காக ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள, அரசு நிலத்தை, தனியார் லே - அவுட் அமைக்கக் கொடுத்த, அரசு மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பெங்களூரு தெற்கு பிரிவு பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் ரமேஷ் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக, நேற்று அவர் அளித்த பேட்டி:

பி.டி.ஏ., புதிதாக அமைத்துள்ள, கெம்பேகவுடா லே - அவுட்டை ஒட்டியுள்ள பெங்களூரு தெற்கு தாலுகா, கெங்கேரி பேரூராட்சி, சூலிகெரே கிராமத்தின் சர்வே எண் 77ல், 4 ஏக்கர் அரசு நிலம், மயானம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது.

இதுதொடர்பாக, 2010 ஜனவரி 1ல் பெங்களூரு நகர மாவட்ட சிறப்பு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலத்தில், கெம்பேகவுடா லே - அவுட் அமைக்கக் கொடுக்கும்படி பி.டி.ஏ., வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால் மயானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, வேறு நோக்கத்துக்கு விட்டுத்தர, சட்டத்தில் இடம் இல்லை என, மாவட்ட நிர்வாகம் பதில் அளித்தது.

அதன்பின் மாநில வருவாய்த்துறை, 2022 ஜனவரி 1ல், 4 ஏக்கர் மயான இடத்தை, சூலிகெரே கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

பி.டி.ஏ.,வின் கெம்பேகவுடா லே - அவுட் அருகிலேயே, கே.என்.எஸ், இன்பிராஸ்டிரக்சர் பிரைவேட் நிறுவனத்தின் சுரேந்திரா என்பவர், 120 ஏக்கர் பரப்பளவில் லே - அவுட் அமைக்கிறார்.

இவர் அமைத்த தனியார் லே - அவுட் மற்றும் கெம்பேகவுடா லே - அவுட் இடையே உள்ள சூலகெரே கிராமத்தின் மயான இடம் இடத்தை, எப்படியாவது கைப்பற்ற சுரேந்திரா சதி செய்கிறார்.

இவரது லே - அவுட்டில், சதுர அடியை 6,000 ரூபாய்க்கு விற்கலாம். மயான இடத்தை பெற்றுக் கொண்டால், அகலமான சாலை அமைத்து, தன் மனைகளை சதுர அடிக்கு 10,000 ரூபாய்க்கு விற்கலாம் என்பது, சுரேந்திராவின் திட்டம்.

இதற்காக தன் செல்வாக்கை பயன்படுத்தி, வருவாய் துறையின் கிராம கணக்கு அதிகாரி குமாரசாமி, வருவாய் ஆய்வாளர் திவாகர் ஆகியோர் முறைகேடாக செயல்பட துாண்டினார்.

இவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, துணை தாசில்தார் ரவி, குமாரசாமி, திவாகர் ஆகியோர் மயான இடத்தில், சாலை அமைக்க என்.ஓ.சி., அளிக்கும்படி, பெங்களூரு தெற்கு தாசில்தாரிடம் சிபாரிசு அனுப்பியுள்ளனர்.

இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என, பெங்களூரு மாவட்ட கலெக்டர், பெங்களூரு தெற்கு தாலுகா தாசில்தாரிடம் வலியுறுத்தியுள்ளோம். துணை தாசில்தார் ரவி, கிராம கணக்கு அதிகாரி குமாரசாமி, வருவாய் ஆய்வாளர் திவாகர் மீது, லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement