சரிகிறது கெஜ்ரிவால் சாம்ராஜ்யம்?

17


புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், தற்போதைய முதல்வர் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களின் ஓட்டு விகிதங்கள் மாறி, மாறி வருகின்றன.


டில்லி ஆம் ஆத்மி கோட்டையாக விளங்கி வந்தது. கடந்த 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதியில் 67 தொகுதிகளை கைப்பற்றி ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்தது. பின்னர் 2020ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற, கெஜ்ரிவால் இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார்.


கடந்த இரண்டு வருடங்களாக கெஜ்ரிவால் மீது ஊழல் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மதுபான ஊழல் வழக்கில், கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால், அதிஷியை முதல்வர் ஆக்கினார். சிறையிலிருந்து விடுதலையான பிறகும், கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும். மக்கள் எனக்கு வாய்ப்பு தருவார்கள் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் பிரசாரத்திலும், டில்லி மக்கள் ஆம் ஆத்மி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறியிருந்தார்.

தற்போது தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறி உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்த முதலே, ஆம் ஆத்மி வேட்பாளர்கள் சரிவை கண்டு வருகின்றனர். அதே நேரத்தில் பா.ஜ., வேட்பாளர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதனால் இந்த முறை டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதியில், முற்பகல் 11.00 மணி நிலவரப்படி பா.ஜ., 42 தொகுதிகளில் பா.ஜ., முன்னிலை வைக்கிறது. ஆம் ஆத்மி 28 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.



முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், தற்போதைய முதல்வர் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களின் முன்னணி நிலவரங்கள் மாறி,மாறி வெளியாகி வருகின்றன.

Advertisement