மணிவிழுந்தானில் இணைப்பு சாலை அமைக்கக்கோரி சாலை மறியல் மக்களை குண்டுக்கட்டாக துாக்கிய போலீசாரால் தள்ளுமுள்ளு
ஆத்துார்: மணிவிழுந்தான் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்லவும், அங்கு இணைப்பு சாலை அமைக்கவும் கோரி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், குண்டுக்கட்டாக மக்களை துாக்கியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் உருவானது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப் பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்பட்டதால், அடுத்தடுத்து இரு உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. அதற்கு பின், சேலம், கள்ளக்குறிச்சி வழியே வரும் அரசு, தனியார் பஸ்கள், மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல், பாலம் வழியே சென்றன. இதனால் அரசு, தனியார் பஸ்களை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தியும் பலனில்லை.
அதேநேரம் இரு பாலங்களில் இருந்து, பஸ் ஸ்டாப்புக்கு, சர்வீஸ் சாலை உள்ள நிலையில் இணைப்பு சாலை அமைக்கப்ப-டவில்லை. தவிர சர்வீஸ் சாலையில் அதிகளவில் வேகத்தடை உள்ளதாக கூறி, பஸ்கள் மேம்பாலம் வழியே சென்று வந்தன.
இந்நிலையில் இணைப்பு சாலை அமைக்கவும், ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்லவும் கோரி, நேற்று காலை, 9:00 மணிக்கு, மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப் எதிரே பந்தல் அமைத்து தர்-ணாவில் ஈடுபட்டனர். 10:30 மணிக்கு மணிவிழுந்தான், சார்வாய், சார்வாய்புதுார், தேவியாக்குறிச்சி, வடகுமரை, தென்குமரை, புனல்வாசல், சாத்தப்பாடி பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்-பட்டோர், மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் உள்ளிட்ட போலீசார், மக்களை அப்புறப்படுத்தினர். மக்கள் எழுந்து செல்லாமல் வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீசார், மக்களை குண்டுக்கட்டாக துாக்-கினர். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து, பஸ்சின் முன் படுத்து, போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். திருமால், 40, என்பவர், பால் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அவரை, போலீசார் மீட்டனர். தொடர்ந்து, பெண் போலீசார், பெண்களை இழுத்துச்செல்ல முயன்றனர். இதனால் மக்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், வாகனங்கள் செல்லமுடியாதபடி போக்குவரத்தும் பாதிக்கப்பட்-டது. மதியம், 12:10 மணிக்கு மறியலை கைவிட்டு, பந்தல் பகு-திக்கு மக்கள் சென்றதால் போக்குவரத்து சீரானது.
பெண்கள் மீது தாக்குதல்
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
மணிவிழுந்தான் ஸ்டாப்பில் பஸ் வர இணைப்பு சாலை இல்லை. பலமுறை மனு அளித்தும், கலெக்டர் உள்ளிட்ட அதிகா-ரிகள் கண்டுகொள்ளாததால் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், பேச்சு நடத்தாமல், டி.எஸ்.பி., சதீஷ்-குமார் உள்ளிட்ட போலீசார், பெண்கள் உள்ளிட்ட அனைவ-ரையும் தாக்கி இழுத்துச்சென்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெண் போலீஸ் காயம்
அதேநேரம் தலைவாசல் ஸ்டேஷன் முதல் நிலை போலீஸ்காரர் செல்வி, 34, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளார். அவர் கூறுகையில், ''உடலில் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றியபோது மீட்க சென்ற என்னை தள்ளிவிட்டு, உடைந்த கண்-ணாடி வளையலில் கீறிவிட்டதில் காயம் ஏற்பட்டது,'' என்றார்.
இ.பி.எஸ்.,சிடம் மனு வழங்கல்
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., சேலத்தில் இருந்து தலைவாசலில் நடந்த திருமண விழாவுக்கு சென்றுகொண்டி-ருந்தார். அப்போது போராட்டம் நடத்திய மக்கள், இ.பி.எஸ்.,சிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து, 'மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ் சாலைக்கு, இணைப்பு சாலை இல்லை. பஸ்களும், ஸ்டாப்பில் நிற்க-வில்லை. தற்போது போராட்டம் நடத்திய நிலையில், போலீசார் தாக்குகின்றனர். எங்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு இ.பி.எஸ்., ''கலெக்டர், சம்பந்தப்பட்ட துறையினரிடம் கூறுகிறேன். இதுதொடர்பாக சட்டசபையிலும் வலியுறுத்து-கிறேன். மக்கள் மீது போலீசார் தாக்குவது தவறான செயல். உங்க-ளுக்காக, அ.தி.மு.க.,வும், நானும் குரல் கொடுப்போம்,'' என்றார்.
100 பேர் மீது வழக்கு
சாலை மறியல் குறித்து, மணிவிழுந் தான் தெற்கு வி.ஏ.ஓ., வினோதா அளித்த புகார்படி, 100 பேர் மீது, தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். அதேபோல் மணிவிழுந்தான் தெற்கு கிராமத்தை சேர்ந்த திருமால், 35, மண்ணெண்ணெய் ஊற்றி, தடுக்க முயன்ற போலீசாரை மிரட்டி தடுத்ததாக, 5 பிரிவு-களில், போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
மேலும்
-
டில்லியில் ஜெட் வேகத்தில் பா.ஜ., வேட்பாளர்கள் முன்னிலை: வீழ்ந்தது கெஜ்ரிவால் ராஜ்ஜியம்!
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
-
டில்லி சட்டசபை தேர்தல்; பா.ஜ., முன்னிலை
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு