கட்டாக்கில் கலக்குவாரா விராத் கோலி: தொடரை வெல்ல இந்தியா 'ரெடி'

கட்டாக்: கட்டாக் போட்டிக்கான இந்திய அணியில் கோலி இடம் பெறுவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த அணியும் பலமாக இருப்பதால், தொடரை எளிதாக கைப்பற்றலாம்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி, இன்று ஒடிசாவின் கட்டாக் பாராபதி மைதானத்தில் நடக்க உள்ளது.
ரோகித் எதிர்காலம்: இந்திய அணிக்கு துவக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா தடுமாறுவது பலவீனம். முதல் போட்டியில் 2 ரன்னில் அவுட்டானார். கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 64 ரன் (கொழும்பு) எடுத்தார். இதற்கு பின் மூன்றுவித கிரிக்கெட்டிலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 37 வயதான இவரது எதிர்காலத்தை தற்போதைய தொடர் நிர்ணயிக்கும். இன்று சுதாரித்து விளையாட வேண்டியது அவசியம்.


வருகிறார் கோலி: முதல் போட்டியில் அனுபவ கோலிக்கு 'ரெஸ்ட்'(முழங்கால் வலி) கொடுக்கப்பட்டது. உடற்தகுதியில் தேறிய இவர், கட்டாக்கில் விளையாடுவது உறுதி என துணை கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார். ஆஸ்திரலிய தொடரில் சோபிக்காத கோலி, சமீபத்திய உள்ளூர் ரஞ்சி போட்டியில் 6 ரன்னுக்கு அவுட்டானார். ஒருநாள் போட்டியில் மன்னன் என்பதால், சாதிக்க வாய்ப்பு உண்டு. கடந்த முறை கட்டாக்கில் 85 ரன் (எதிர் வெ.இ., 2019) விளாசி, வெற்றிக்கு கைகொடுத்தார். இது போல மீண்டும் அசத்த வேண்டும். கோலி வருகையால், இந்திய வெற்றி கூட்டணியில் மாற்றம் ஏற்படும்.

கடந்த போட்டியில் ஸ்ரேயாஸ் 36 பந்தில் 59 ரன் விளாசினார். இடது கை பேட்டரான ஜெய்ஸ்வால் 15 ரன் தான் எடுத்தார். கோலிக்காக ஸ்ரேயாஸ் அல்லது ஜெய்ஸ்வால் நீக்கப்படலாம். துவக்கத்தில் இடது-வலது கை பேட்டர் கூட்டணியை பயிற்சியாளர் காம்பிர் விரும்புவதால், ஸ்ரேயாஸ் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த போட்டியில் கீப்பராக ரிஷாப் பன்ட்டிற்கு பதில் ராகுல் இடம் பெற்றார். இதே நிலை தொடரலாம். ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவிந்திர ஜடேஜா என பேட்டிங் படை பலமாக உள்ளது.


தொடரை வெல்லும்: வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, ஹர்ஷித் ராணா மிரட்டினால், இந்தியா எளிதாக தொடரை கைப்பற்றலாம். 'சுழலில்' அசத்த அக்சர் படேல், குல்தீப், வருண் சக்ரவர்த்தி, ஜடேஜா உள்ளனர்.


தேறாத பேட்டிங்: ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி பேட்டிங்கில் சொதப்புகிறது. இவர்களது அதிரடி ஆட்டம் இந்திய 'ஸ்பின்னர்'களிடம் எடுபடவில்லை. பில் சால்ட், டக்கெட், ஜோ ரூட், பட்லர், புரூக், பெத்தல், லிவிங்ஸ்டன் போன்றோர் நிலைத்து நின்று ஆட வேண்டும். பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் சாதிக்க முயற்சிக்கலாம்.

யார் ஆதிக்கம்

கட்டாக்கில் இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டியில் மோதின. இதில் இந்தியா 3, இங்கிலாந்து 2ல் வென்றன.


* இங்கு இந்திய அணி பங்கேற்ற 17 ஒருநாள் போட்டியில் 13ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. 4ல் தோற்றது. கடைசியாக விளையாடிய 7 போட்டியிலும் வென்றது.

* கட்டாக், பாராபதி மைதான ஆடுகளத்தில் ரன் மழை பொழியலாம். 'ஸ்பின்னர்'களுக்கு ஒத்துழைக்கும். இரவு நேர பனிப் பொழிவு பவுலர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை.



தேவை 94 ரன்


கோலி ஒருநாள் போட்டியில் 13,906 ரன் (283 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். இன்னும் 94 ரன் எடுத்தால் 14,000 ரன் எட்டிய மூன்றாவது வீரராகலாம். அதிவேகமாக (குறைந்த இன்னிங்ஸ்) இம்மைல்கல்லை எட்டி சாதனை படைக்கலாம். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் சச்சின் (350 இன்னிங்ஸ்), இலங்கையின் சங்ககரா (378 இன்னிங்ஸ்) உள்ளனர்.


20,000 ரசிகர்கள்
கட்டாக் பாராபதி மைதானத்தில் நேற்று கோலி, ரோகித், ரிஷாப் பன்ட் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களை காண, 20,000 ரசிகர்கள் திரண்டனர். ஸ்ரேயாஸ், சுப்மன், ஹர்திக் பாண்ட்யா, ஷமி உள்ளிட்டோர் பயிற்சியை தவிர்த்தனர்.

Advertisement