வெண்திரை விரித்தது போல கடும் மூடுபனி முகப்பு விளக்குகளுடன் ஊர்ந்த வாகனங்கள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில், சில நாட்களாக, இரவு முதல் அதிகாலை வரை பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. ஆனால், நேற்று அதிகாலை, வழக்கத்திற்கு மாறாக வெண்திரை விரித்தது போல, கடுமையான மூடுபனி காணப்பட்டது.

அடுத்தடுத்த வீடுகள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு மூடுபனி காணப்பட்டதால், வித்தியாசமான சூழலை கண்டு பகுதி மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

ரயில் பாதை மற்றும் சாலைகளில் மூடுபனி சூழ்ந்து, ரயில்கள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்து பாதித்தது. குறிப்பாக, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு புலப்படாததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

ஏராளமான வாகனங்கள் ஒட்டிகள், மூடுபனி விலகும் வரை பாதுகாப்பான இடத்தில் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். நேரத்திற்கு சென்று சேர வேண்டும் என, எண்ணிய வாகனங்கள் மட்டும், முகப்பு மற்றும் பார்க்கிங் விளக்குகளை ஒளிரவிட்டபடி ஊர்ந்து சென்றன. இருப்பினும் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பின், காலை 8:30 மணிக்கு மேல், மெல்ல மெல்ல பனி மூட்டம் விலக துவங்கியது. கடும் மூடுபனி நிலவியதால் நேற்று நாள் முழுதும் வெளியில் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

Advertisement