முதல்வர் மாளிகையில் சூனியம்?
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850400.jpg?width=1000&height=625)
மஹாராஷ்டிர முதல்வராக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், முதல்வருக்கென ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான, 'வர்ஷா'பங்களாவிற்கு இன்னும் போகாமல், தன் பழைய பங்களாவிலேயே வசித்து வருகிறார் முதல்வர்.
'இதற்கு காரணம், பில்லி சூனியம்' என, சொல்கிறார் உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ரவுத். 'முதல்வரின் பங்களாவில் பில்லி, சூனியம் வைக்கப்பட்டுள்ளது. காளையின் இரண்டு கொம்புகள், இந்த பங்களாவில் வீசப்பட்டுள்ளன. அசாமில் உள்ள, காமாக்யா கோவிலில் காளையை யாரோ பலி கொடுத்து, அதன் கொம்புகளை இங்கே போட்டுள்ளனர்.
'முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விற்குப் பின், யார் முதல்வராக பதவியேற்று, இந்த பங்களாவில் வசித்தாலும், அவர்கள் அந்த பதவியில் தொடர முடியாது என, பூஜை செய்து சூனியம் வைத்துள்ளனர். அதனால் தான், தேவேந்திர பட்னவிஸ் இந்த பங்களாவில் வசிப்பதைத் தவிர்க்கிறார்' என கூறினார், சஞ்சய் ரவுத்.
இது, மஹாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'இது அத்தனையும் பொய்' என, கூறியுள்ளார் தேவேந்திர பட்னவிஸ். 'என் மகள், 10ம் வகுப்பு படித்து வருகிறார்; அவருக்கு தேர்வு நடக்க உள்ளது. அதுவரை, தற்போதுள்ள பங்களாவிலேயே இருக்கலாம் என, என் மகள் சொல்லி விட்டதால் தான், இதுவரை வீடு மாறவில்லை' என, பதில் கூறி உள்ளார் முதல்வர்.
'எது எப்படியோ... பில்லி - சூனிய விவகாரம், முதல்வர் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது; இவர் வீடு மாறுவது சந்தேகம் தான்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.