இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்; 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு

7



வேலுார் : இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில், சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தாப் தாசினிடம், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 30 வயது இளம்பெண், தன் நிலத்தை விற்று 15 லட்சம் ரூபாய்க்கு சீட்டு கட்டி வந்தார்.



மேலும் ஏஜன்டாக செயல்பட்டு தனக்கு தெரிந்தவர்களையும் சேர்த்து, 1.75 கோடி ரூபாய்க்கு சீட்டு கட்ட வைத்தார். அவர்களுக்கு சீட்டு முடிந்தவுடன், 40 லட்சம் ரூபாயை நிறுவனம் திருப்பிக் கொடுத்தது.



மீதி பணத்தை இளம்பெண் கேட்டபோது, வேலுார் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கடந்த நவம்பரில் அல்தாப் தாசின் கூறினார். தாயுடன் நவ., 3ல், வேலுார் புது பஸ் ஸ்டாண்டுக்கு இளம்பெண் சென்றார்.


பொது இடத்தில் அதிக தொகை கொடுத்தால் பிரச்னை வரும் என்று கூறி, அருகே உள்ள ஒரு விடுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு தாயுடன் இளம்பெண் சென்றார். சீட்டு கம்பெனியில் பணிபுரிந்த கிரிஜா, புவனா, தேவி, ராஜ்குமார், மகேஷ் இருந்தனர். பணத்தைக் கொடுக்க முடியாது என்று கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதே சமயம், பெண்ணின் தாயை, வேறு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.


மேலும் 'உன்னை பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்துள்ளோம். வெளியில் சொன்னால் இணையதளத்தில் வெளியிடுவோம்' என, மிரட்டியுள்ளனர்.


பாதிக்கப்பட்ட இளம்பெண், வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். வேலுார் அனைத்து மகளிர் போலீசார், அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் மற்றும் கிரிஜா, தேவி, புவனா என, ஆறு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement