கேரள அமைப்பினரை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம்

1



கூடலுார்: குமுளியில் தடையை மீறி கேரள அமைப்பு சமீபத்தில் நடத்திய போராட்டத்தைக் கண்டித்து, நேற்று பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் தேனி மாவட்டம் லோயர்கேம்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.



முல்லை பெரியாறு அணை தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ளது. அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி உள்ளது. ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.



முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக 2011ல் தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அணை குறித்த போராட்டம் தமிழக பகுதியில் லோயர்கேம்ப் வரையும், கேரளாவில் வண்டிப்பெரியாறு வரையும் மேற்கொள்ளலாம் என இரு மாநில தரப்பில் முடிவு செய்யப்பட்டது.


இதனை பின்பற்றும் விதமாக கடந்த சில நாட்களாக தமிழகப் பகுதியில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை லோயர்கேம்ப் வரை நடத்தினர்.


ஆனால் தடையை மீறி சமீபத்தில் கேரள ஜனநாயக உரிமை பாதுகாப்பு குழு சார்பில் அணை பிரச்னை தொடர்பாக குமுளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.



இதனைக் கண்டித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் பொன்காட்சிக் கண்ணன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் முன்னிலையில் குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.


நேற்று லோயர்கேம்ப் பஸ் ஸ்டாண்டில் இருந்து குமுளியை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இவர்களுடன் தமிழக வெற்றி கழகத்தினர் 60க்கும் மேற்பட்டோர் பச்சை துண்டு அணிந்து கலந்து கொண்டனர்.


இவர்களை உத்தமபாளையம் டி.எஸ்.பி., செங்கோட்டு வேலவன், கூடலுார் இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே தடுத்து நிறுத்தினர். இதனால் ஒரு மணி நேரம் வரை தமிழகம்- கேரள மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement