மீண்டும் படைப்புழு தாக்குதல் மக்காச்சோள உற்பத்தி பாதிப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850401.jpg?width=1000&height=625)
பல்லடம்: ''அதிகரித்து வரும் படைப்புழு தாக்குதலால், மக்காச்சோள உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது'' என பல்லடம் பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில், கால்நடை மற்றும் கோழி தீவனங்கள், மாவுப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் எத்தனால் உற்பத்திக்கு, மக்காச்சோளம் மூலப்பொருளாக உள்ளது. சமீப காலமாக, தேவை அதிகம் உள்ளதாலும், போதிய விலை கிடைப்பதாலும், பெரும்பாலான விவசாயிகள், மக்காச்சோளத்தை விரும்பி பயிரிடுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்தில், கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. கோழிகளுக்கு, மக்காச்சோளம் முக்கிய தீவனம் என்பதால், கடந்தாண்டை காட்டிலும், ஏறத்தாழ, 540 ஏக்கரில் கூடுதலாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படைப்புழுக்களின் தாக்குவதால், மக்காச்சோள உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மக்காச்சோள விவசாயிகள் கூறியதாவது:
கடந்த காலங்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டபோது, தமிழக அரசு சார்பில், 'டெலிகேட்' மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. இதனால், பூச்சி தாக்குதல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. இருப்பினும் முழுமையாக பூச்சிகள் கட்டுப்படாத நிலையில், தற்போது, மீண்டும் தாக்குதல் துவங்கி உள்ளது. மக்காச்சோளத்துக்கு உள்ளேயே செல்லும் படைப்புழுக்கள், சோளங்களை தின்று கடுமையாக சேதப்படுத்துகின்றன. ஒரு ஏக்கருக்கு, 180 மி.லி., கொண்ட 'டெலிகேட்' மருந்து தெளிக்க வேண்டும். 2,200 ரூபாய் கொண்ட இந்த மருந்தை இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். இருப்பினும், படைப்புழுக்கள் கட்டுப்படுவதில்லை. இதனால், 10 -முதல் 15 சதவீதம் வரை மக்காச்சோள உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. தேவை அதிகம் உள்ள நிலையில், படைப்புழுக்களின் தாக்குதல் உற்பத்தியை குறைப்பதால் வருவாய் பாதிக்கும். எனவே, 'டெலிகேட்' மருந்தை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க வேண்டும். படைப்புழுக்களை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.