நகைக்கடன் தள்ளுபடி தொகை கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிப்பு
சிவகங்கை : கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 2021 மார்ச் வரை வழங்கப்பட்ட, 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்களை தள்ளுபடி செய்து, தமிழக அரசு அந்த ஆண்டில் உத்தரவிட்டது.
இதையடுத்து, அத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, 14.52 லட்சம் பேரின், 5,013 கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடியாகின. இதற்காக, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகையை, தவணை முறையில் அரசு வழங்குகிறது. ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டது. தற்போது, 606 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தங்க நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், கூட்டுறவு நிறுவனங்களுக்கு வர வேண்டிய தொகை முழுவதையும் அரசு விடுவித்து விட்டது; அதற்கு ஏற்ப ஒவ்வொரு சங்கம் மற்றும் வங்கிக்கும் தர வேண்டிய தொகையும் வழங்கப்பட்டு விட்டது' என்றார்.