ரோட்டில் நிறுத்தப்படும் கார்களால் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி

விருதுநகர்: விருதுநகரில் ரோட்டில் நிறுத்தப்படும் கார்களால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.

விருதுநகரின் நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் நன்கு வளர்ச்சி அடைந்து வருகின்றன.

விரைவில் அருகே உள்ள ஊராட்சிகளும் இணைக்கப்படுவதால் இதன் விரிவாக்கம் மக்களுக்கு நன்மை தரும். இருப்பினும் தற்போதய சூழலில் விருதுநகரின் நகர் பெரும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.

மெயின் பஜாரில் வழக்கமாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் தற்போது நகரின் மற்ற பகுதிகளுக்கும் பரவ துவங்கி விட்டது. உதாரணமாக மதுரை ரோட்டின் பத்திரப்பதிவு அலுவலகத்தை சுற்றிலும் ரோட்டை யொட்டி நிறுத்தப்படும் டூவீலர்களால் நெரிசல் ஏற்படுகிறது.

வி.வி.ஆர்., பூங்கா உள்ள கச்சேரி ரோட்டின் அருகேயும் இது உள்ளது. இங்கு வணிக கடைகள் அதிகம் உள்ளதால் சென்று வரும் வழிகளில் கார்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த சிக்கல் தொடர்கிறது.

நகராட்சி நிர்வாகம் வாகனங்களுக்கான நிறுத்த வசதியை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

டிராபிக் போலீசாரும் வழிமறித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

ரோட்டில் நிறுத்தப்படுவதை தடுக்க வாகன நிறுத்த வசதி ஒன்று தான் நிரந்தர தீர்வு.

Advertisement