390 வாரங்கள் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் தன்னார்வலர்கள்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3851076.jpg?width=1000&height=625)
கூடலுாரில் 2015 நவம்பரில், 'சோலைக்குள் கூடல்' என்ற அமைப்பை துவக்கினர். இதில் பள்ளி கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக இவர்கள் நடத்திவரும் இயற்கை பயணத்தில் 4 ஆயிரம் கருவேல மரங்களை அகற்றி உள்ளனர். பத்தாயிரம் மரக்கன்றுகளும், 4 ஆயிரம் பனை விதைகளும், 15 ஆயிரம் விதைப் பந்துகளையும் விதைத்துள்ளனர். 390 வாரங்கள் தொடர்ந்து ஞாயிறுதோறும் இவர்கள் ஒருங்கிணைந்து மரக்கன்றுகள் நடுவது, பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாசில்லா கூடலுாரை உருவாக்க மரக்கன்றுகள் அதிகளவில் வளர்ப்பதுதான் தாரக மந்திரம் என்ற அடிப்படையில் இப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அரசமரம், அத்தி, ஆலமரம், வேம்பு, புங்கை, பூவரசு, வாகை, நாவல், மூங்கில், வில்வம், இலுப்பை, செண்பகம், நீர்மருது, மந்தாரை போன்ற மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர்.
கூடலுாரின் முக்கிய தெருக்கள், 18ம் கால்வாய் கரைப்பகுதி, அரசு விதைப்பண்ணை சாலை, தெற்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு, தாமரைக்குளம் ரோடு, கருநாக்கமுத்தன்பட்டி சாலை, அழகர் கோயில் பகுதி, மயான சாலை, கூடலூர் -லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் இவர்கள் நட்ட மரங்கள் வளர்ந்து பசுமையாகி உள்ளன.
கூடலுார் மாநில நெடுஞ்சாலையின் நடுவில் அமைக்கப்பட்டு உள்ள சென்டர் மீடியனில் செடிகள் நட்டு பராமரித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரஜாகுமார். இவரின் இடம் கூடலுார் புறவழிச்சாலை அருகே உள்ளது. இந்த இடத்தை இவர், மரக்கன்றுகளை நாற்றுக்களாக வளர்க்க இலவச இடத்தை வழங்கி உள்ளனர்.
அந்த இடத்தில் நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு நுாற்றுக்கணக்கான நாற்றுகளை வளர்த்து வருகின்றனர். தேவை கருதி கேட்பவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
ஆக்சிஜன் தரும் மரங்கள்
பி.பிரபு, உறுப்பினர், 'சோலைக்குள் கூடல்' அமைப்பு, கூடலுார்: மரக்கன்றுகள் அதிகம் வளர்க்கப்படுவதால் நாம் சுவாசிக்கும் காற்று மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஆபத்தை தரும் அனைத்து வாயுக்களையும் தனக்குள்ளே இழுத்துக் கொண்டு ஆரோக்கியம் தரும் ஆக்சிஜனை மனிதர்கள் பயன் பெற ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன.
பணம் பெறாமல் மனிதனின் நுரையீரலை சுத்தம் செய்யும் ஒரு மருத்துவர் மரம் மட்டுமே. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள், பராமரிப்பதன் அவசியம் குறித்து அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீடுகளுக்கு முன்பும் இடவசதி இருந்தால் கட்டாயம் மரம் வளர்க்க வேண்டும்., என்றார்.
பாலிதீன் ஒழிப்பு அவசியம்
சீனிவாசன், ஆசிரியர்: விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டுமே மனிதன் உயிர் வாழ முடியும் என்ற ஒரு விஷயத்தை மாணவர்களிடம் அறிவுறுத்த வேண்டும். பள்ளி, வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் வீணாக வெளியேற்றாமல் காய்கறி தோட்டம் அமைத்து பயன்படுத்தலாம்.
தினந்தோறும் மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் காய்கறித் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும், பாலிதீன் பயன்படுத்துவதால் உள்ள விபரீதங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இது மிகுந்த பயனுள்ளதாக அமையும். அது மட்டும் இன்றி இவர்களின் வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும். மேலும் மரக்கன்றுகளை நடும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து அனைவரும் இயற்கையோடு பயணிக்க முன்வந்தால் மாசில்லா கூடலுாரை உருவாக்க முடியும்., என்றார்.
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்