நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!

3

சென்னை: நாளை (பிப்.11 ) தைப்பூசத்தை ஒட்டி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்று பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது.


நாளை (பிப்.11ம் தேதி) செவ்வாய்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. எனினும் பதிவுத்துறையில் பத்திரப்பதிவுகள் வழக்கம் போல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திர பதிவுத்துறை அறிக்கை:

பொது மக்களின் நலன் கருதி, அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்கலகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான தைப்பூச திருநாள் அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டைபோலவே இந்தாண்டும் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு, விடுமுறை நாள் ஆவணப்பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, கடந்த 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை அறிவுரை வழங்கியிருந்தது. ஆனால், தமிழகத்தில் மூன்று பதிவுத்துறை அலுவலகங்களை தவிர, வேறு எங்கும் பதிவு நடக்கவில்லை. எல்லா பதிவு அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement