மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

தேவதானப்பட்டி: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் திருவிழாவிற்கு கொடி மரம் நடப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில், நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., துாரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. தீபாராதனைக்கு முன் தேங்காய் உடைக்கப்படுவது இல்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதும் இல்லை. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குலதெய்வமாக நினைத்து வணங்கி வருகின்றனர்.

இக்கோயில் திருவிழா பிப்.26 முதல் மார்ச் 5 வரை 8 நாட்கள் விமர்சையாக நடக்க உள்ளது. இதற்காக பிப்.4ல் 55 அடி உயர கொடிமரம் நடப்பட்டது. நேற்று விடுமுறை, முகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கொடி மரத்தை வணங்கி, அம்மன் தரிசனம் பெற்றுச் சென்றனர்.-

Advertisement