கோவை கலெக்டர் கிராந்திகுமார் மாற்றத்துக்கு காரணம் என்ன? ஒரே நேரத்தில் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்
கோவை : கோவை கலெக்டர் கிராந்திகுமார் மாற்றத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கோவையில் மூன்று ஐ.ஏ. எஸ்., அதிகாரிகள் ஒரே நேரத்தில் இட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கலெக்டராக பணியாற்றிய கிராந்திகுமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துக்கு மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், தெள்ளத் தெளிவாக, தடுமாற்றமின்றி, ஏழை எளிய மக்களும் புரியும் வகையில் தமிழில் பேசினார்.
கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று, மக்களின் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்தார்.
விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், துவக்கம் முதல் கடைசி வரை அமர்ந்து, பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார். நீர் நிலைகளை மீட்டெடுக்கவும், நீர் வழித்தடங்களை சீரமைக்கவும் முயற்சிகள் எடுத்தார்.
கனிம வளம் கடத்தல்
அதேநேரம், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியை சுரண்டி எடுத்து, லோடு லோடாக கனிம வளம் கடத்தியதை கட்டுப்படுத்த முடியாமல், தடுமாறி விட்டார். ஐகோர்ட்டில் இருந்து நீதிபதிகள் குழு அமைத்து கள ஆய்வு செய்தது, மாவட்ட நிர்வாகத்துக்கு சறுக்கலாக இருந்தது. கனிம வள கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் கனிம வளக் கொள்ளையர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஐகோர்ட் உத்தரவுக்கு பிறகும் பெயரளவுக்கே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் காரணமாக, மீண்டும் விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழுவை ஐகோர்ட் நியமித்து, முழு அதிகாரம் வழங்கியது. அக்குழு சமீபத்தில் ஆய்வை துவக்கியது. இத்தகைய நடவடிக்கைகள் கலெக்டரின் மாற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
2023 ஜன., 30ல் கலெக்டராக நியமிக்கப்பட்ட கிராந்திகுமார், பிப்., 5ல் பதவியேற்றார். இரண்டு ஆண்டுகள் மற்றும், 5 நாட்கள் அப்பதவியில் இருந்திருக்கிறார். தற்போது சென்னைக்கு மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறார். இதேபோல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்வேதாவுக்கு பதிலாக, பொன்னேரியில் சப்-கலெக்டராக பணிபுரிந்த சங்கத் பல்வந்த் வாகே நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி சப்-கலெக்டராக பணிபுரிந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கேத்தரின் சரண்யா, தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கோவையில் இருந்து ஒரே நேரத்தில் மூன்று ஐ.ஏ. எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இது, கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவையின் புதிய கலெக்டராக, சென்னையில் தமிழக அரசின் தலைமை செயலர் அலுலகத்தில் தனி அதிகாரியாக பணியாற்றும் பவன்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காவேரி மாவட்டத்தை சேர்ந்தவர். பெங்களூருவில் பி.இ.எஸ்., பல்கலையில் இன்ஜினியரிங்கில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ் படித்திருக்கிறார். 2016ல் ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் பணியில் சேர்ந்தார்.தமிழில் நன்கு பேசும் திறன் கொண்டவர் என்பதால், பொதுமக்கள் சந்தித்து குறைகளை சொல்லும்போது, புரிதல் பிரச்னை எழாது.