அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம்: தி.மு.க., கூட்டணி கட்சிகள்

89

சென்னை : 'அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியுடன் செயல்பட்டு, அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம்' என, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.


தி.மு.க., துணை பொதுசெயலர் துரைமுருகன், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை:


இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டு தமிழகம். இங்குள்ள பழனியாண்டவர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட ஹிந்து மத திருத்தலங்கள், அன்னை வேளாங்கண்ணி சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா போன்ற வழிபாட்டு தலங்களிலும், மத வேறுபாடின்றி பொதுமக்கள் வழிபடுவதே இதற்கு சான்று.


இத்தகைய தமிழகத்தில் மத வேறுபாடுகளை விதைத்து மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேட, சில அமைப்புகள் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகின்றன. பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக, இத்தகைய பிளவுவாத அரசியலை செய்து வருகின்றனர்; அடுத்த குறி தமிழகமாக இருக்கிறது.


பா.ஜ.,வின் தேர்தல் அறுவடைக்காக, தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க திட்டமிட்டு சதிகளை அரங்கேற்றி வருகின்றன. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலும், மலையின் தென்புறம் காசி விஸ்வநாதர் கோவிலும், கீழ்புறம் உச்சிப் பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளன.


திருப்பரங்குன்றம் மலை ஒரு பகுதியில், சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ளது. தர்காவில் அவ்வப்போது, ஆடு, கோழி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. முஸ்லிம் மட்டுமின்றி ஹிந்துக்களும் தர்காவிற்கு சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டதாக பொய் செய்திகளை பரப்பி பிப்., 4ம் தேதி திருப்பரங்குன்றத்தில் கூடுமாறு மத அமைப்புகள் அழைப்பு விடுத்தன.


அங்கு கூடிய மத அமைப்புகள், இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், வெறியூட்டும் விதத்திலும் பேசி, தங்களது பிளவுவாதத் திட்டத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அதை புறக்கணித்து பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயர்த்தி பிடித்த திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மதுரை மக்களுக்கும், மதச்சார்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாராட்டுகள்.


மதுரை எப்போதும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியுடன் செயல்பட்டு, அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement