தீயணைப்பாளர் பணிக்கு தேர்வு: 1,732 பேர் பங்கேற்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் ஐந்து மையங்களில் நடந்த தீயணைப்பு பணி தேர்வை, 1,732 பேர் எழுதினர்.

புதுச்சேரி தீயணைப்பு துறையில் ஆண்கள்-39, பெண்கள்-19 என 58 தீயணைப்பாளர்கள் பணியிடங்களுக்கும், 12 தீயணைப்பு வாகன ஓட்டுநர் நிலை- 3 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடந்தது.

பெத்திசெமினேர் பள்ளி உப்பளம் இமாகுலேட் பள்ளி, திருவள்ளுவர் பள்ளி உள்ளிட்ட ஐந்து மையங்களில் தேர்வு நடந்தது. விண்ணப்பித்த 2093 பேரில் 1732 பேர் எழுதினர். தேர்வு மையங்களில் தேர்வு கட்டுப்பாட்டாளர் பங்கஜ்குமார் ஜா, தேர்வு பார்வையாளர் ருத்ரகவுடு, துணை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜெய்சங்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தேர்வு மையத்திற்குள், 9:30 மணிக்குள் தேர்வர்கள் வரவேண்டும் என, நிர்வாக சீர்த்திருத்த துறை அறிவித்திருந்தது. ஆனால், 40க்கும் மேற்பட்டவர்கள் 10:00 மணிக்கு வந்தனர். அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு எழுத வந்தவர்கள் அனைவருக்கும் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. தீவிர பரிசோதனைக்கு பிறகு தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

-ஆன்சர் கீ வெளியீடு



தீயணைப்பு பணிக்கு தேர்வு முடிந்த கையோடு ஆன்சர் கீயும் மாலை 3:00 மணியளவில் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த விடையில் ஆட்சேபனை இருந்தால் இன்று (10ம் தேதி) காலை 9:00 மணிக்குள் தங்களுடைய லாகின் மூலம் உள்ளே நுழைந்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement