காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம்... விரிவாக்கம்; அனைத்து படிப்புகளுக்கும் வழங்க முடிவு

புதுச்சேரி: காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம், அனைத்து படிப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை உயர்கல்வி துறை முடுக்கி விட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, காமராஜர் கல்வி உதவி திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தால் தான் ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகி வருகிறது. வழக்கமாக, காமராஜர் கல்வி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு விடும். ஆனால், கடந்த 2022ம் ஆண்டில் இருந்து புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு காமராஜர் திட்டத்தின் கீழ் நிதியுதவி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் இத்திட்டத்தின் கீழ் கல்லுாரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனர்.

இருப்பினும் ஏற்கனவே காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கு நிதியுதவி தொடர்ந்து கிடைத்து வருகிறது.

காமராஜர் நிதியுதவி திட்டத்தின் கீழ் தற்போது மருத்துவம், பொறியியல், செவிலியர் மாணவர்களுக்கு மட்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு நிதியுதவி வழங்க ரூ.29.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை, முதல்வர் ரங்கசாமியின் உத்தரவின்பேரில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை உயர்கல்வி துறை முடுக்கி விட்டுள்ளது. சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு, கலை, அறிவியல், கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், வேளாண், சட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து உயர் கல்வி துறை இயக்குநர் அமன்சர்மா கூறும்போது, 'அனைத்து படிப்புகளுக்கும் காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார். அதன் அடிப்படையில் உயர்கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வேறுபாடியின்றி அனைவருக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்படும்' என்றார்.

எம்.பி.பி.எஸ்., 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய், பி.டெக்., படிப்பிற்கு 25 ஆயிரம் ரூபாய், நர்சிங் படிப்பிற்கு 8 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.

கடந்த 2003-2004ம் ஆண்டு 436 மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது. தற்போது எம்.பி.பி.எஸ்., படிப்பில் 600 பேர், நர்சிங்-596, பி.டெக்., படிப்பில் -4980 என மொத்தம் 6176 மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டத்தின் நிதியுதவி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement