மத்திய அரசுக்கு ரூ.3 கோடி பிச்சை போடுகிறேன்: எம்.எல்.ஏ.,

திருச்சி : திருச்சியில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில், “மத்திய அரசுக்கு, நான் தான் ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் பிச்சை போட்டுக் கொண்டு இருக்கிறேன்,” என, ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி பேசினார்.

அ.தி.மு.க.,வின் திருச்சி மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசன், திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை பிரியாணி கடை நடத்த வாடகைக்கு விட்டு இருப்பதாக, சில வாரங்களுக்கு முன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், பொதுக்கூட்டம் நடந்தது.

அதில், பழனியாண்டி எம்.எல்.ஏ., பேசியதாவது:

நான், நான்கு தலைமுறைக்கு முன்பே பணக்காரன்; பரம்பரை பணக்காரன். 'சொத்து இருக்கு; பிள்ளைகள் இல்லை' என்று தான் எங்களை பெற்றுள்ளனர். யார் காசும் எனக்கு தேவையில்லை.

ஆண்டுதோறும், மத்திய அரசுக்கு, ஜி.எஸ்.டி.,யாக 2 கோடி ரூபாய், இதர வகையில், 1 கோடியே 5 லட்சம் ரூபாய் கட்டுகிறேன். அந்த வகையில், மத்திய அரசுக்கு, நான் தான் 3 கோடி ரூபாய் பிச்சை போட்டுக் கொண்டு இருக்கிறேன்.

ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை பிரியாணி கடை நடத்த வாடகைக்கு விடுவதாக கூறும் அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசனுக்கு நாவடக்கம் தேவை. நான் நல்ல திசையிலும் ஓடுவேன்; குறுக்கு திசையிலும் ஓடுவேன். எதையும் சந்திக்கத் தயார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement