அரசு மருத்துவமனைகளில் சோலார் பேனல் ரூ.100 கோடி மிச்சமாகும் என எதிர்பார்ப்பு

பெங்களூரு: கர்நாடக அரசு மருத்துவமனைகளில், மின் கட்டண செலவை குறைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. ஆரம்ப சுகாதார மையங்களை போன்று, அரசு மருத்துவமனைகளில் சோலார் பேனல் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்ய தயாராகி வருகிறது.

கர்நாடக அரசு சோலார் மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசு கட்டடங்கள், அலுவலகங்களில் சோலார் பேனல் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்து, மின் கட்டண செலவை குறைக்க திட்டம் வகுத்தது. பல கட்டடங்கள், அலுவலகங்களில் சோலார் மின்சாரம் உற்பத்தியாகிறது.

அதே போன்று, ஆரம்ப சுகாதார மையங்களின் மின் கட்டண சுமையை குறைக்க அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக 1,152 ஆரம்ப சுகாதார மையங்களின் மேற்கூரையில் சோலார் பேனல் பொருத்தியது. இதனால் இம்மையங்களுக்கு மாதந்தோறும் 70 சதவீதம் பணம் மிச்சமாகிறது.

இந்த திட்டத்தை அரசு மருத்துவமனைகளுக்கும் விஸ்தரிக்க, சுகாதாரத்துறை தயாராகி வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சுகாதாரத் துறையின் பொருளாதார சுமையும் குறையும்.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில், சோலார் பேனல்கள் பொருத்தி, மின் உற்பத்தி செய்ய, 'செல்கோ பவுண்டேஷன்' ஒருங்கிணைப்பில், சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. 2024 நவம்பரில் திட்டத்தை துவக்கியது. கார்ப்பரேட் பொது பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ், சோலார் பேனல்கள் பொருத்த, பவுண்டேஷன் நிதியுதவி வழங்குகிறது.

ஏற்கனவே ராய்ச்சூரின் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள் உட்பட மாநிலத்தின் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளுக்கு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேட்டரி அடிப்படையிலான வசதியால், தினமும் 24 மணி நேரமும், மருத்துவமனைகளுக்கு மின்சாரம் கிடைக்கிறது. மின் கட்டணத்துக்கு செலுத்திய பணமும் மிச்சமாகிறது.

பவுண்டேஷனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, 2026 வேளையில் 3,381 துணை ஆரம்ப சுகாதார மையங்கள், 1,500 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு, சோலார் பேனல்கள் பொருத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு 120 கோடி ரூபாய் செலவாகும். இத்திட்டத்தின் கீழ், 119 தாலுகா மருத்துவமனைகளுக்கும் சோலார் பேனல்கள் பொருத்தப்படுகின்றன.

துணை ஆரம்ப சுகாதார மையங்களில் பொருத்தப்படும் சோலார் பேனல்கள், 250 முதல் 500 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவைகளாகும். ஆரம்ப சுகாதார மையங்களில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள், 4 கிலோ வாட் முதல் 5 கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்டவைகளாகும். தாலுகா மருத்துவமனைகளுக்கு 10 கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, சோலார் பேனல்கள் பொருத்தப்படும். இத்திட்டத்தால் அடுத்த 10 ஆண்டுகளில், அரசு கருவூலத்துக்கு 100 கோடி ரூபாய் மின் கட்டணம் மிச்சமாகும்.

சிறப்பான மருத்துவ சேவை வழங்கவும், சோலார் மின்சாரம் உதவியாக இருக்கும். சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். அரசு மருத்துவமனைகளில், மின் கட்டண செலவை மிச்சப்படுத்தலாம். டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement