சோளத்தட்டு இருப்பு; விவசாயிகள் ஆர்வம்

பொங்கலுார் : கடந்த புரட்டாசி பட்டத்தில் விவசாயிகள் கால்நடைத் தீவனத்திற்காக சோளம், கம்பு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்திருந்தனர். அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. காலதாமதமாக பருவ மழை துவங்கியது,

சில இடங்களில் மழை பொய்த்துப் போனது,ஒரு சில இடங்களில் அளவுக்கு அதிகமாக மழை பெய்தது போன்ற காரணங்களால் சோளத்தட்டு வளர்ச்சி குறைந்துவிட்டது.

வரும் கோடை காலத்தில் தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. கறவை மாடு வைத்துள்ள விவசாயிகள் பலர் தங்கள் தீவன தேவைக்காக வெளியில் இருந்து அதிக அளவில் வாங்கி இருப்பு வைக்க துவங்கி உள்ளனர்.

கால்நடை விவசாயிகள் கூறுகையில், ''சோளத்தட்டு, வைக்கோல் உள் ளிட்டவை பெருமளவில் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது.

கோடைகாலத்தில் தீவன தட்டுப்பாடு ஏற்படும் பொழுது கழிவுப்பஞ்சு, அடர் தீவனம் போன்றவற்றை வாங்கி கால்நடைகளை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.

இதனால், முன்கூட்டியே சோளத்தட்டை கொள்முதல் செய்து இருப்பு வைக்கிறோம்'' என்றனர்.

Advertisement