நிரந்தர துணைவேந்தர் நியமிக்க கோரிக்கை

புதுச்சேரி, : புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்க, மாணவர்கள் மற்றும் பெற்றோர் நல சங்கம் வலியுறுத்திள்ளது.

இதுகுறித்து சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன், கவர்னருக்கு அனுப்பியுள்ள மனு:

புதுச்சேரி, அம்பேத்கர் சட்டக் கல்லுாரி இறுதியாண்டு, தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து, 3 முறை தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டு இறுதியாக அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல், பல்கலைக்கழக தேர்வுத் துறையில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் தேர்வில் முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுத்தாளுக்கு பதிலாக இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுதாளை குளறுபடி செய்ததால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தேர்வுத்துறை தலைவரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு கல்லுாரி மாணவர்கள் தேர்வு சம்பந்தமாகவும், தேர்வுத்தாள் திருத்துவது சம்பந்தமாகவும் அணுகினால், சந்திக்க மறுத்து வருகிறார்.

இதுபோன்ற பல்வேறு குளறுபடிகளை போக்க, புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளிப்படை தன்மையோடு செயல்பட நிரந்தர துணைவேந்தர், பதிவாளரை நியமிக்க, மத்திய பல்கலைக்கழக மானியக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement