'ஏர்ஹாரன்' பயன்பாடு அதிகரிப்பு; நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

கரூர்: கரூர் மாவட்டத்தில், ஜவுளி உற்பத்தி, பஸ் பாடி கட்டுதல், கொசுவலை தயாரிப்பு என, பல தொழில்கள் சிறந்து விளங்குகின்றன. தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக கரூர் உள்ளதால், தினசரி ஏராளமான தனியார், அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. பெரும்பாலான தனியார் பஸ்கள், கார், பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள, 'ஏர்ஹாரன்' சாலைகளில் நடந்து செல்பவர்களை நடுங்க வைக்கின்றன.

மோட்டார் வாகன சட்டப்படி, ஒலி மாசு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. இருப்பினும், பெரும்பாலான ஓட்டுனர்கள் ஏர்ஹாரன்களையே பயன் படுத்துகின்றனர். சராசரி மனிதனின் கேட்கும் திறன் ஒலி அளவு, 80 டெசிபல். பகல் நேரத்தில் ஒலியின் அளவு, 53 டெசிபலும், இரவில், 35 டெசிபலும் இருந்தாலே, போதுமானது.

மேலும், 90 டெசிபலுக்கு மேல் அதிக ஒலியை, ஒருவர் எட்டு மணி நேரத்திற்கு கேட்டால், அவருக்கு காது கேளாமை பாதிப்பு ஏற்படும். 115 டெசிபல் அளவு ஒலியை தொடர்ச்சியாக கேட்கும்போது, காது நரம்புகள் தளர்ச்சியடையும். காதுகளுக்கு மிக அருகே, திடீரென இத்தகைய ஹாரன்கள் அடிக்கப்படும் போது, காதுகளில் உள்ள ஜவ்வு கிழியும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஏர்ஹாரன்களை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement