கோட்டமேட்டில் எல்கை பந்தயம்

குளித்தலை: குளித்தலை அடுத்த புதுப்பாளையம், கோட்டமேடு, எம்.ஜி.ஆர்., நகர், எழுநுாற்றுமங்கலம், மேலகுட்டப்பட்டி, கீழகுட்டப்பட்டி ஆகிய, ஆறு ஊர் பொதுமக்கள் சார்பில், பஞ்., அலுவலகம் முன், 10ம் ஆண்டு மாபெரும் எல்கை பந்தய போட்டி நடந்தது. இதில், மாடுகளுக்கான போட்டியில், சிறிய மாடு, ஒத்தை மாடு, இரட்டை மாடு, குதிரைகளுக்கான போட்டியில், புதிய குதிரை, பெரிய குதிரை, சைக்கிள் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒன்றிய செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். சிறிய மாட்டிற்கு, 3 மைல், பெரிய மாட்டிற்கு, 6 மைல், இரட்டை மாட்டிற்கு, 8 மைல் தொலைவும்; சிறிய குதிரைக்கு, 8 மைல், பெரிய குதிரைக்கு, 10 மைல் துாரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில், திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட காளைகள், குதிரைகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றிபெற்ற குதிரை, காளையின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.

குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், ராஜ்குமார், ஜெயராமன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement