கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: மக்கள் உண்ணாவிரத போராட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி, கூட்டப்பள்ளி ஏரிக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செங்கோடு நகராட்சி, கூட்டப்பள்ளி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 5,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்பின் கடைசி பகுதியில், 33 ஏக்கர் பரப்பளவில் ஏரி இருந்தது. ஆக்கிரமிப்புகளால், தற்போது ஏரியின் பரப்பளவு சுருங்கி, கழிவுநீர் செல்லும் ஓடையாக மாறிவிட்டது. இந்நிலையில், இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். தொடர்ந்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்தனர். மூன்றாம் கட்டமாக, நேற்று கூட்டப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, கூட்டப்பள்ளி மக்கள் நல இயக்க தலைவர் பத்மநாபன் கூறியதாவது: ஏரியை துார்வாரி, நிலத்தடி நீரை செரிவூட்ட வேண்டும். இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது. மேலும், திருச்செங்கோட்டை சுற்றி, சுற்றுவட்டச்சாலை வருவதால், திருச்செங்கோட்டின் மையப்பகுதியாக கூட்டப்பள்ளி மாறி உள்ளது. எனவே, ஊருக்கு வெளியே வேறு இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement