கெஜ்ரிவால் பதவியை ராஜினாமா செய்தது ஆம்ஆத்மிக்கு பின்னடைவு; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

20

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வி அடைவதற்கு, முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது முக்கிய காரணம் என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. 48 தொகுதிகளில் வென்ற பா.ஜ., 27 ஆண்டுகளுக்குப் பிறகு டில்லியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தோல்விக்கான காரணம் என பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர், ஆம்ஆத்மி தோல்விக்கான காரணங்களை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக கெஜ்ரிவால் செய்து வந்த எதிர்ப்பு அரசியல் ஆம்ஆத்மியின் தோல்விக்கு முதல் காரணமாகும். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, ஜாமினில் வந்த கெஜ்ரிவால், முதல்வர் பதவியில் இருந்து விலகியது 2வது காரணமாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் பதவி விலகி விட்டு, வேறு ஒருவரை முதல்வராக நியமித்தது மிகப்பெரிய தவறான முடிவு.

அண்மை காலமாக கெஜ்ரிவால் எடுத்து வந்த அரசியல் நிலைப்பாடும் தோல்விக்கு காரணமாகும். 'இண்டியா' கூட்டணியில் இணைந்து விட்டு, பிறகு டில்லி சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல், ஆம்ஆத்மி ஆட்சி நிர்வாகத்தில் தோல்வியடைந்தது. கடந்த மழை காலத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதும் இந்தத் தேர்தலில் எதிரொலித்துள்ளது. இப்போதைய சூழலில், டில்லியில் ஆம்ஆத்மி எழுச்சி பெறுவது மிகவும் கடினமான விஷயம். ஆகவே, தற்போது, ஆட்சி நிர்வாகத்தில் இல்லாத கெஜ்ரிவால், பிற மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தலாம். குறிப்பாக, கடந்த தேர்தலில் குஜராத்தில் ஆம்ஆத்மி சிறப்பாக செயல்பட்டுள்ளது. எனவே அங்கு கவனம் செலுத்தலாம், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement