முழுமை பெறாத தண்டவாள பேக்கிங் பணி

ரயில்வே கேட்டுகளில் வாகன ஓட்டிகள் அவதி

புதுச்சேரி: புதுச்சேரியில் பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால், ரயில்வே கேட்டுகளில் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

புதுச்சேரி - விழுப்புரம் இடையிலான பழைய இரும்பு ரயில் தண்டவாளங்கள் அகற்றி அதி வேக ரயில் செல்லும் வகையில், புதிய தண்டவாளம் கடந்த சில நாட்களுக்கு முன்புபொருத்தப்பட்டது. புதிய தண்டவாளங்கள் கீழ்பகுதியில் கருங்கல் ஜல்லி கொட்டி சரியான உயரத்தில் தண்டவாளத்தை அமைக்கும், 'பேக்கிங்' பணி இதுவரை துவக்கப்படவில்லை.பேக்கிங் பணி முடிந்தால் மட்டுமே ரயில்வே கேட் பகுதியில் தார் சாலை அல்லது ரப்பர் ஷிட் பொருத்தி சரிசெய்யப்படும்.

புதிய தண்டவாளத்திற்கு பேக்கிங் பணி முடியாததால், வில்லியனுார், சுல்தான்பேட்டை, கம்பன் நகர், காராமணிக்குப்பம், ஏ.எப்.டி., மில், வாணரப்பேட்டை ரயில்வே கேட் பகுதியில் தற்காலிகமாக கருங்கற்கல் கொட்டப்பட்டுள்ளது.

ஏ.எப்.டி. மில், காராமணிக்குப்பம், வில்லியனுார் ரயில்வே கேட் பகுதியை ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்ல கூடிய பகுதி. இப்பகுதி ரயில்வே கேட்டில்கருங்கல், பாறை கொட்டி வைத்திருப்பதால், பஸ் லாரிகள் கூட ரயில் பாதையை கடந்து செல்ல முடியாமல் திணறுகிறது. பைக், ஸ்கூட்டரில் செல்லும் முதியோர், பெண்கள் ஸ்கூட்டரை பேலன்ஸ் செய்ய முடியாமல், சக்கரம் ரயில்பாதை கற்களில் சிக்கி கிழே விழுந்து காயம் அடைகின்றனர்.

ஏ.எப்.டி., மில் ரயில்பாதை புதிய பஸ் நிலையம் அருகே அமைந்திருப்பதால், நாள் முழுதும் ரயில்வே கேட்டில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.எனவே, ரயில்வே கேட் பகுதிதண்டவாளங்களை விரைவாக பேக்கிங் செய்து, பழைய படி ரப்பர் ஷிட்டுகளை பொருத்த வேண்டும்.

Advertisement