ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க விரும்பிய எலான் மஸ்க்: பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மென்

3

வாஷிங்டன்: ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர் குழு முன் வந்துள்ளது. இதனை நிராகரித்த ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மென், 'எக்ஸ்' நிறுவனத்தை நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம் என பதிலடி கொடுத்து உள்ளார்.



உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதில் பலவித மாற்றங்களை செய்துள்ள அவர், அதன் பெயரையும் 'எக்ஸ்' என மாற்றி உள்ளார். கடந்த 2015ம் ஆண்டு சாட்ஜிபிடியை வடிவமைத்த ஓபன் ஏ.ஐ., நிறுவனத்திற்கு ஆதரவாக எலான் மஸ்க் இருந்தார்.


ஆரம்ப கட்டத்தில் ஓபன் ஏ.ஐ.,நிறுவனம் லாபமற்ற நோக்கம் கொண்ட நிறுவனமாக இருந்தது. பிறகு லாபத்தை நோக்கி மாற்றுவதற்கான முயற்சிகளில் அதன் சி.இ.ஓ., சாம் ஆல்ட்மென் ஈடுபட்டார். இதனால், அதிருப்தியடைந்த எலான் மஸ்க் அந்த நிறுவனத்தை கடுமையாக விமர்சித்தார். வழக்கும் தொடர்ந்தார்.

இந்நிலையில், ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை விலைக்கு வாங்க எலான் மஸ்க் முயற்சி செய்வதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரும், சில முதலீட்டாளர் குழுவும் சேர்ந்த அந்த நிறுவனத்தை 97 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கும் திட்டத்தை, சாம் ஆல்ட்மெனிடம் வழங்கி உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

ஆனால், இதனை நிராகரித்துள்ள சாம் ஆல்ட்மென், '' வேண்டாம் நன்றி. ஆனால், நீங்கள் விரும்பினால், 'எக்ஸ்' தளத்தை 9.74 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க தயாராக இருக்கிறேன்,'' என பதிவிட்டு உள்ளார்.

Advertisement