பழநியில் கூட்டநெரிசலில் சிக்கிய பக்தர்கள்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852163.jpg?width=1000&height=625)
பழநி: பழநி தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் குவிந்துள்ள நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தை மயங்கி விழுந்தது.
பழநியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கோவிலுக்கு செல்லும் வழிகள் அனைத்தையும் போலீசார் அடைத்து வைத்துள்ளனர்.
இதனால், எந்த வழியில் செல்வது, எந்த வழியில் திரும்புவது என தெரியாமல் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். பழநி அடிவாரம் செல்லும் அனைத்து வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பல மணிநேம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் கூட்டநெரிசலில் சிக்கி பெண் குழந்தை மயக்கமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பலமணிநேரம் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமலேயே சொந்த ஊருக்கு திரும்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பழநி அடிவாரம் பகுதியில் வழக்கம்போல வழிகளை அடைக்காமல் குறிப்பிட்ட பாதையில் சென்றுவரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம் எனவும், இந்த ஆண்டு பக்தர்கள் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பயனில்லாமல் போனதால் வருத்தம் ஏற்படுகிறது என பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.