சட்டவிரோதமாக அகதிகள் தங்கி உள்ளனரா: இந்திய உணவகங்களில் பிரிட்டன் போலீசார் சோதனை

14

லண்டன்: சட்டவிரோதமாக அகதிகள் யாரும் தங்கி உள்ளனரா என்பது குறித்து கண்டறிய, இந்தியர்கள் நடத்தும் உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிரிட்டன் போலீசார் சோதனை நடத்தினர்.


பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டறியும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அப்படி சிக்கியவர்களை கைது செய்து சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.


அப்படி உள்ளே வருபவர்களை தடுப்பதற்காக பிரிட்டன் அரசு புது சட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளது. இந்த அகதிகளால் எல்லை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறியுள்ள அரசு, அவர்களை எல்லையிலேயே தடுத்து மொபைல்போனை பறிமுதல் செய்து கைது செய்யும் வகையில் பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க இந்த சட்டத்தில் வழிவகை செய்துள்ளது.


கேர் ஸ்டார்மர் தலைமையில் புதிய அரசு பதவியேற்றதும் பிரிட்டனில் இருந்து அடைக்கலம் தர முடியாது என மறுத்தவர்கள் மற்றும் வெளிநாட்டு கிரிமினல்கள், குற்றவாளிகள் என 19 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் எனக் கூறியுள்ளது.


இந்நிலையில், அடுத்த கட்டமாக, சட்டவிரோதமாக குடியேறிய அகதிகள் குறித்து, இந்திய உணவகங்கள், கபேக்கள், வணிக வளாகங்கள், வாகனம் தூய்மை செய்யும் இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்குள்ள இந்தியர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. ஹம்பர்சைட் பகுதியில் உள்ள இந்திய உணவகத்தில் நடந்த சோதனையில் ஏழு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.


இது தொடர்பாக உள்துறை செயலாளர் யுவெட்டே கூப்பர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஜனவரி மாதம் 828 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது அதில் 609 பேர் கைது செய்யப்பட்டனர். உணவகங்கள், கபேக்கள், புகையிலை தொழிற்சாலை உள்ள இடங்களில்தான் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களின் செயல்பாடுகள் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல், இந்தாண்டு ஜன.,இறுதி வரை சட்டவிரோதமாக குடியறேியவர்களுக்கு எதிரான சோதனைகள் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக 1,090 நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. பொய் சொன்னது கண்டறியப்பட்டால், இங்கிலாந்து பண மதிப்பில் 60 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

Advertisement