ஜே.இ.இ., தேர்வு 'ரிசல்ட்' 14 பேர் முழு மதிப்பெண்
புதுடில்லி, பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஜே.இ.இ., நுழைவுத் தேர்வின் முதல் அமர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., உள்ளிட்ட பொறியியல் கல்லுாரிகளில் சேர்வதற்கு ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான மெயின் தேர்வின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 22 துவங்கி 30 வரை நடந்தது. ஆங்கிலம், தமிழ் உட்பட 13 மொழிகளில் நடந்த இந்த தேர்வை 12.58 லட்சம் மாணவர்கள் எழுதினர். நம் நாட்டில் மட்டுமின்றி துபாய், மஸ்கட், தோஹா, வாஷிங்டன் என 15 வெளிநாட்டு மையங்களிலும் தேர்வு நடந்தது.
இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 14 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர். மற்றவர்கள் டில்லி, உ.பி., கர்நாடகா, ஆந்திரா, குஜராத், தெலுங்கானா மற்றும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.
மெயின் தேர்வில் முதல் 2.5 லட்சம் இடங்களுக்குள் வரும் மாணவர்கள் மே மாதம் நடக்கும் அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெறுவர்.