நீதிபதிகள் தினமும் 14 மணி நேரம் பணிபுரிகின்றனர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852575.jpg?width=1000&height=625)
ராமேஸ்வரம்:''நீதிபதிகள் தினமும் 13 முதல் 14 மணி நேரம் அர்ப்பணிப்புடன் பணிபுரிகின்றனர்'' என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் பேசினார்.
ராமேஸ்வரத்தில் ரூ.7 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் விருந்தினர் மாளிகை கட்டடங்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் திறந்து வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது :
நீதிபதிகள் உண்மையின் அடிப்படையில் பாரபட்சமின்றி வழக்கை தீர்மானிக்க வேண்டும். இந்த குணம் தான் நீதிபதிக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என திருவள்ளுவர் கூறுகிறார். தீர்ப்பு வழங்குவதில் முன்கூட்டியே கருத்துக்களை முடிவு செய்வது அல்ல. நீதி என்பது வெறும் சட்ட உரையின் வரம்புகளைத் தாண்டி குடிமக்கள் எளிதாக அணுக கூடியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த புதிய கட்டடங்கள் நீதிபதிகள் நீதி வழங்கும் இடங்களாக மட்டுமின்றி, சட்ட அமைப்பை நிலை நிறுத்தும் முக்கிய களமாக விளங்க வேண்டும்.
14 மணி நேர பணி
முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் பெரும்பாலும் நீதிபதிகள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியது இருக்கும். இதற்காக மாவட்ட நீதிபதிகள் தங்களை தயார்படுத்தி கொள்வது மிக முக்கியமானது. நீதிபதிகள் தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை வேலை செய்வதாக அமைச்சர் ரகுபதி கூறினார்.
ஆனால் நான் காலை 10:00 மணி முதல் இரவு 12:30 மணி வரை வேலை செய்கிறேன். ஒருமணி நேரம் இடைவேளை எடுத்து சாப்பிட்டு விட்டு பணியில் ஈடுபடுவேன். மேலும் அனைத்து நீதிபதிகளும் தினமும் 13 முதல் 14 மணி நேரம் வரை பணி புரிகிறார்கள். மாவட்ட நீதித்துறை நம் சட்ட அமைப்பின் முதுகெலும்பாக செயல்படுகிறது. நீதிமன்றம், வழக்கறிஞர்கள் இடையிலான நல்லுறவு நீதித்துறையின் மேம்பட்ட செயல்பாட்டிற்கான அடித்தளமாக உள்ளது. இந்த உறவு தொடர வேண்டும்.
தமிழக அரசுக்கு நன்றி
நீதித்துறையும், அரசும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இலக்கை அடைய முன்னேற வேண்டும். இதில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றாக இணைந்து நல்ல பாதையை உருவாக்குவோம். நீதிதுறையின் நோக்கம் யாருக்கும் தவறு செய்யாமல் இருப்பதும், அதை உறுதி செய்வதும் தான்.
541வது திருக்குறளில்' ஒரு நீதிபதி உண்மையான ஆட்சியாளராக இருக்க வேண்டும்,' என வலியுறுத்துகிறது. அக்காலத்தில் ஆட்சியாளர்கள் நீதிபதியாக இருந்தனர். நீதிபதிகள் நடுநிலையுடனும், நீதியை பாரபட்சம் இன்றி வழங்க வேண்டும். நீதி மேலோங்கி நிற்க துணிச்சல், அசைக்க முடியாத உறுதியுடன் ஒன்றுபட்டு முன்னேறுவோம். இவ்வாறு பேசினார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, சி.சரவணன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூப் அலிகான், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் மோகன்ராம், கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ், ராமேஸ்வரம், கமுதி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.