பழநி தைப்பூசத்திருவிழா தேரோட்ட உற்ஸவம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852578.jpg?width=1000&height=625)
பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தைப்பூசத்திருவிழாவில் நேற்று திருத்தேரோட்டம் நடந்தது.
பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஆறாம் நாள் விழாவான பிப்.10 காலை தந்த பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
மாலை வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு வெள்ளி தேரோட்டமும் நடந்தது.
நேற்று (பிப்.11) காலை 11:15 மணிக்கு தேரில் சுவாமி எழுந்தருள மாலை 4:45 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்தனர். கோயில் யானை கஸ்துாரி தேரின் பின்னால் வந்தது. மாலை 6:32 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.
சன்னதி வீதியில் போதுமான குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். சில இடங்களில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மயக்கமடைந்தனர்.
அங்கு மருத்துவ வசதி இல்லாததாலும் மருத்துவமனைக்கு எளிதில் அழைத்து செல்ல முடியாததாலும் அருகில் உள்ள கடைக்காரர்கள் மயக்கம் அடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினர். குடமுழுக்கு மண்டபம் வழியாக மலைக்கு செல்லவும் படிப்பாதை வழியாக கீழே இறங்கவும் பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். 9 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அவதி
மூன்று தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப் பட்டிருந்தன. ஆனால் எந்த பஸ் எங்கு நிற்கும் என முறையான வழிகாட்டுதல் இல்லாத தால் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.