வருவாண்டி தருவாண்டி மலையாண்டி தைப்பூசத் திருவிழாவில் முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட முருகன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை 10:35 மணிக்கு விசேஷ பூஜை, சுவாமி, அம்பாள் புறப்பாட்டுடன் தைப்பூசத் திருவிழா நடந்தது.

மாலை 4:00 மணிக்கு வால சுப்பிரமணியர் புறப்பாடு, சுவாமி அம்பாளை அழைத்து வருதல், வெள்ளி மயில் பூதம், மான் உள்ளிட்ட பல வாகனங்களில் இரவு 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

பக்தர்கள் பலர் விரதம் இருந்து தைப்பூச விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் உள்ள பாலசுப்பிரமணிய கோயில், பாவாலி குமாரசுவாமி கோயில்களில் பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆமத்துார் செல்லியார் அம்மன் கோவில் திடலில் உள்ள செந்தில் ஆண்டவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

*ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் தைப்பூச வழிபாடு நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாள், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு ஹோமம் நடந்தது. பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள், மயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை வீதியுலா புறப்பாடு நடந்தது.

பழனி ஆண்டவர் கோயில் உட்பட நகரின் பல்வேறு தெருக்களில் உள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூச வழிபாடு சிறப்புடன் நடந்தது. பல்வேறு தெருக்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதியுலா வந்தனர்.

நத்தம்பட்டி வழி விடு முருகன் கோயிலில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோவிலில் அதிகாலையில் மூலவர் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. கந்த சஷ்டி விழா குழு சார்பில் பஜனை வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச தேரோட்டம்



சிவகாசி: சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

இக் கோயிலில் தைப்பூச திருவிழா பிப். 2ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு சுவாமி புஷ்ப வாகனம், ரிஷப வாகனம் மயில்வாகனம் உள்ளிட்டவைகளில் வீதி உலா நடந்தது. நேற்று காலை சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்பட்டு தேரோட்டம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று செண்பக விநாயகர் கோயில் தெப்பத்தில் தெப்ப தேர் திருவிழா நடக்கிறது. இதேபோல் திருத்தங்கல் முருகன் கோயில்,

சிவகாசி சிவன் கோயில், மாரியம்மன் பத்ரகாளியம்மன், துர்க்கை அம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement