138 கிலோ புகையிலை பறிமுதல்; 4 பேர் கைது

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆண்டிபட்டி எஸ்.ஐ.,மணிகண்டன் தாலுகா அலுவலகம் அருகே வாகன சோதனை நடத்தினார்.

அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது. வாகனத்தை ஓட்டி வந்த கேரளா,தேவிகுளம் தாலுகா வட்டவடை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், வாகனத்தில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு 51, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். கணேஷ்பாபு தகவலில் புகையிலை பாக்கெட்டுகளை மொத்தமாக விற்பனை செய்த ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த அஜித்குமார் 29, பெரியகுளம் வடுகபட்டியை சேர்ந்த பரமசிவம் 52, ஆகியோரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்து 80 மதிப்பிலான 138 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர்களுடன் தொடர்பில் இருந்து தலைமறைவான போடியைச் சேர்ந்த கோவிராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement