ஸ்கூட்டர் மீது வேன் மோதி விபத்து திருநங்கை உட்பட 2 பேர் பலி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஸ்கூட்டர் மீது வேன் மோதிய விபத்தில் திருநங்கை உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் அடுத்த கோனுார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 48; எலக்ட்ரீஷியன். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு விழுப்புரம் பகுதியில் பணியை முடித்துக் கொண்டு, ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்றார்.

விழுப்புரம் - திருச்சி சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அய்யங்கோவில்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநங்கை லக்ஷனா, 25; என்பவர் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறினார்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விராட்டிக்குப்பம் சாலையில் சென்றபோது, எதிரே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற வேன், பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் முருகன், லக்ஷனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement