ஐ.டி.ஐ.,களில் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு; வைத்திலிங்கம் எம்.பி.,க்கு மத்திய அமைச்சர் பதில் 

புதுச்சேரி: பாரளுமன்றத்தில் வைத்திலிங்கம் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழில் முனைவோர் அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதில் அளித்துள்ளார்.

பாராளுமன்ற கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி., பேசுகையில், ஆணாதிக்கம் உள்ள தொழில்களில் போட்டியிட பெண்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான திட்டம் அரசிடம் உள்ளதா என எழுப்பிய கேள்விக்கு, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அளித்த பதில்:

திறன் மேம்பாட்டின் மூலம் பெண்கள் உட்பட தேசத்தின் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த அரசு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் 'பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா', 'ஜன் சிக்ஷன் சன்ஸ்தான்', தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் கைவினைஞர் பயிற்சித் திட்டம், தொழில் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினருக்கும் திறன், மறு திறன், கூடுதல் திறன் பயிற்சிகளை வழங்குகிறது.

எலக்ட்ரானிக்ஸ், சில்லறை விற்பனை, சுகாதாரம், அழகு மற்றும் ஆரோக்கியம், கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடை தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சி திட்டங்கள் பெண்களின் அதிக பங்களிப்பை ஈர்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் கிராமப்புறப் பெண்கள் பங்கேற்கவும் பயன்பெறவும், உள்ளூர் திறன் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 19 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட ஐ.டி.ஐ.,க்கள் பெண்களுக்காக பிரத்யேகமாக உள்ளன. அனைத்து ஐ.டி.ஐ.,க்களிலும் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீட்டை அனைத்துப் படிப்புகளிலும் இந்திய அரசு அங்கீகரித்துள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களின் பொது இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் இந்த இடங்களை நிரப்ப முடியும்' என்றார். இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

Advertisement